Sunday 29 April 2012

மே தினம் 2012 : புதிய ஈழப்புரட்சியாளர்கள்

நவீன காலனியாதிக்க ஆட்சிக்கவிழ்ப்பு, அந்நியத் தலையீடுகளை, புதிய ஜனநாயக உள்நாட்டுப் புரட்சியால் தோற்கடிக்க எழுக!

உலகத் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட தேசங்கள் ஒன்றுபடுக!

தமிழீழ சுயநிர்ணய உரிமைப் போராட்டம் ஓங்குக!

மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வெல்க!

மேதினி போற்றும் மே நாள் வாழ்க!


அன்பார்ந்த தமிழீழ மக்களே, இளைஞர்களே, மாணவர்களே;

இவ்வருடம் மே மாதம் முள்ளிவாய்க்கால் பிரளயத்தின் மூன்றாம் ஆண்டு நினைவாகும். சர்வதேச தொழிலாளர் தினத்துடன் ஆரம்பிக்கும் இம்மாதத்தில் தமிழீழ அரசியல் விடுதலைப் போராட்டத்தை – சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான குறிப்பான பணிகள் பாதைகள் பற்றிய வரையறையைச் செய்து கொள்வது புரட்சிகர இயக்கத்தின் முன்னாலுள்ள பிரதான கடமையாகும்.

முள்ளிவாய்க்கால் பிரளயம் முடிந்த இந்த மூன்று ஆண்டுகளில், அதாவது விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமை அழித்தொழிக்கப்பட்டதன் பின் தமிழீழ விடுதலை இலட்சியத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான ஒரு அரசியல் தலைமை தோன்றவில்லை. இதன் காரணத்தால் விடுதலை இலட்சியம் புறம் தள்ளப்பட்டு சீர்திருத்தவாத சந்தர்ப்பவாத வழிகளில் மக்கள் திசைதிருப்பப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்திய வாதிகள், உலகமுதலாளித்துவப் பொதுநெருக்கடியின் சுமைகளை, தங்கள் நாட்டுத் தொழிலாளி வர்க்கத்தின் மீதும், மூன்றாம் உலக நாட்டு மக்களின் மீதும் திணிப்பதை எதிர்த்து - உலகெங்கிலும் உள்ள தொழிலாளி வர்க்கமும் ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களும் எழுச்சிமிக்க போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

எனவே இவ்வாண்டு மேதினத்தை நாம் புறவயமாக- சர்வதேச ரீதியாக உலகெங்கும் ஒரு புரட்சிகரச் சூழல் கொந்தளித்திருக்கும் நிலையிலும், அகவயமாக- உள்நாட்டில் விடுதலைப்புலிகள் அமைப்பு அழித்தொழிக்கப்பட்டு புரட்சி அலை தணிந்து அரசியல் தலைமையற்ற நிலையிலும் எதிர்கொள்கின்றோம்.

சர்வதேச ரீதியான புரட்சிகர அலை எழுச்சியின் உயர் நிலையைப் பற்றிப்பிடித்து மீண்டும் எவ்வாறு ஒரு புரட்சிகர அலை எழுச்சியை ஈழத்தில் – இலங்கையில் கட்டியமைப்பது என்பதே இன்று எம்முன்னுள்ள பிரதான கேள்வியாகும்.

இக்கேள்விக்கு விடைகாணும் பொருட்டு நாம் இன்றைய சர்வதேச, உள்நாட்டுச் சூழ்நிலைகளையும், அவற்றில் இருந்து எழும் பிரதான அரசியல் போக்குகளையும், இப்போக்குகள் பால் பல்வேறு சமூக வர்க்கங்களின் நிலைப்பாடுகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.இதன் மூலம் மட்டுமே தமிழீழத் தேசிய விடுதலைக்கான இன்றைய எமது போராட்டப் பாதையையும், பணிகளையும், வகுத்துக் கொள்ளவும், புரட்சிகரத் தலைமையைக்  கட்டியெழுப்பவும் முடியும்.

இன்றைய சர்வதேசச் சூழ்நிலை:

1) மீளமுடியாப் பொருளாதார நெருக்கடியில் ஏகபோக முதலாளித்துவ உலகம்

 2008ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதிநெருக்கடி, முதலாளித்துவ மிகை உற்பத்தியால் ஏற்பட்டதாகும். இந்த நெருக்கடி ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் பரவி நீடித்து வருகிறது. உலகப் பொருளாதார வளர்ச்சியானது 2010ல் 4 சதவீதமாக இருந்தது, 2011ல் 2.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்து விட்டது. அது மேலும் வீழ்ச்சியடையும் என்று ஐ.நா. ஆய்வு அறிக்கை அபாயச்சங்கை ஊதியுள்ளது*.
---------------------------------------------------------------
*The bank estimates that global GDP growth will be 3.3% this year against 3.9% in 2010, with emerging markets growing by 6%.
Overall, global growth is projected to ease from 3.8 percent in 2010 to 3.2 percent in 2011, before picking up to 3.6 percent in each of 2012 and 2013. The slowdown for high-income countries (from 2.7 percent in 2010 to 2.2 percent in 2011) mainly reflects very weak growth in Japan due to the after-effects of the earthquake and tsunami (see note on the Impact of the disaster in Japan). Growth in the remaining high-income countries is expected to  remain broadly stable at around 2.5 percent through 2013, despite a gradual withdrawal of the substantial fiscal and monetary stimulus introduced following the financial crisis to prevent a more serious downturn.
For developing countries growth is projected to decline from 7.3 to 6.2 percent between 2010 and 2012 before firming somewhat in 2013, reflecting an end to bounce-back factors that served to boost growth in 2010 and the tightening of monetary and fiscal policies as capacity constraints become increasingly binding (see note on the Synopsis of regional outlooks and the regional annexes to this document for more details on recent economic developments and the outlook for low– and middle-income countries — including country specific forecasts). (மூலம்:உலக வங்கி)
------------------------------------------------------------------
அமெரிக்காவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2010ல் 2.3 சதவீதமாக இருந்தது, 2011ல் 1.8 சதவீதமாக வீழ்ந்துவிட்டது. அங்கு வேலையின்மையோ வரலாறு காணாத அளவிற்கு 18.4 சதவீதமாக உயர்ந்துவிட்டது. பெருகிவரும் வேலையின்மை, குறைந்து கொண்டே செல்லும் ஊதியம், மக்களின் வாங்கும் சக்தியை குறைத்து விட்டது. அமெரிக்கா இன்று உலகின் மிகப்பெரிய கடன்கார நாடாக மாறியுள்ளது *
-------------------------------------------
*$15,064,816,000,000- The U.S. GDP in 2011. The debt as of Jan 1st, 2012 is 15,170,600,000,000. United States now owes more money than its yearly production (GDP).
Statue of Liberty seems rather worried as United States national debt soon to pass 20% of the entire world's combined GDP (Gross Domestic Product). In former President Bill Clinton's first-ever State of the Union address, he announced that if America's debt were stacked in thousand dollar bills, it would "reach 267 miles" into space.
Today, the U.S. debt is $14.3 trillion and the government is currently embroiled in a fierce debate over whether to raise the allowed borrowing amount further. Stacked and bundled into one-hundred dollar bills, the national debt would be as wide and long as two football fields and as high as the Statue of Liberty, reports graphic design artist Oto Godfrey
-------------------------------------------- 
உலகப் பொருளாதாரத்தின் உந்துசக்தியாக கருதப்படும் அமெரிக்க ஏகாதிபத்தியம் புதை சேற்றில் மூழ்கிவருகிறது.

ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமோ தற்கொலைப் பாதையை நோக்கிச் செல்கிறது. பிரிட்டனின் ஒட்டுமொத்த உற்பத்தி 0.5 சதவீதமாக வீழ்ந்துவிட்டது. ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளிலும் மந்தநிலை தொடர்கிறது. கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி, அயர்லாந்து போன்ற நாடுகள் கடன் பொறியில் சிக்கியுள்ளதானது ஐரோப்பிய யூரோ நாணயத்தின் நீட்டிப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஸ்பெயினில் 50 சதவீத இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். (The euro area unemployment rate rose by 0.1 percentage point (for the eighth consecutive month) to 10.8% in February, maintaining a record high since the start of the global financial crisis.) என ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

மூன்றாம் உலக நாடுகள், அல்லது `வளர்ந்துவரும் நாடுகள்` என பொய்யாகவும் கொச்சையாகவும் அழைக்கப்படும் ஒடுக்கப்படும் கீழைத்தேசங்கள் அதன் பிற்போக்கு ஆளும்வர்க்கங்களால் ஐ.எம்.எஃப் இனதும், உலக வங்கியினதும் கட்டளைகளுக்குப் பணிந்து தமது தேசங்களின் சொந்தத் தேசியப் பொருளாதாரங்களை ஏகபோக முதலாளித்துவத்தின் நலன்களுக்கு சேவகம் செய்யும் – சேவைத்துறைத் துணைப் பொருளாதாரமாக மாற்றியமைத்துவிட்டன.

இதனால் இன்று முதலாளித்துவ உலகில் தொடரும் மீளமுடியாப் பொருளாதார நெருக்கடிகள் தவிர்க்க இயலாமல் ஒடுக்கப்படும் கீழைத்தேசங்கள் அனைத்தையும் கடுமையாக பாதித்து வருகின்றன. இதற்கு இலங்கை போன்ற நமது மிகச் சிறிய நாடு கூட விதிவிலக்கில்லை.(இலங்கையின் வரவு செலவுத் திட்டம் குறித்த ஆய்வைப் படிக்க இணைப்பை அழுத்துக.)
-----
2) உலக மறுபங்கீடும் யுத்தங்களும்.

ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த நாடுகளை- சந்தைகளையும் மூலவளங்களையும், அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய வாதிகள் மறுபங்கீடு செய்து தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். இந்த நவீன காலனிய ஆதிக்கப்போக்கு இன்னமும் முடியவில்லை. உலகு தழுவிய ஏகபோக முதலாளித்துவத்தின் பொருளாதார நெருக்கடி இதனை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது.கிழக்கைரோப்பா, பொஸ்னியா, கொசோவோ, சூடான், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மேலும் சிரியா, ஈரான் ஆகியவை இப்போக்கின் தொடர்ச்சியேயாகும்.

3) அரபு எழுச்சி

 
அமெரிக்க ஏகாதிபத்தியம், ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தமது நவீன காலனிய உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டவும், மத்திய கிழக்கில் கிடைக்கும் எண்ணெய் வளத்தின் மீது தமது ஏகபோகத்தை நிறுவவும் நேட்டோ நாடுகளுடன் இணைந்து தமக்கு அடிபணியாத நாடுகள் மீது தாக்குதல் தொடுத்தது. பயங்கரவாதத்தை ஒழிப்பது, பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது எனும் பேரில் ஆப்கனிலும், ஈராக்கிலும் இராணுவ ரீதியில் தலையிட்டு தமது பொம்மை ஆட்சிகளை நிறுவியுள்ளது. தற்போது சிரியா மீதும், ஈரான் மீதும் இராணுவத் தலையீட்டிற்குத் தயாராகி வருகிறது.

அமெரிக்கா மத்திய கிழக்கிலும், வடக்கு ஆபிரிக்க நாடுகளிலும் தனது ஆதரவு நாடுகளுக்கு இராணுவ ரீதியில் உதவி செய்து அந்நாடுகளின் சர்வாதிகார ஆட்சிகளைப் பாதுகாத்து வந்தது. 2008ஆம் ஆண்டு நெருக்கடிகளின் சுமைகளை அரசியல், பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்கள் மூலம் இந்நாடுகளின் மீது திணித்தது. இத்தகைய புதியதாராளக் கொள்கைகள் ஏற்படுத்திய நெருக்கடிகளைத்  தாங்கமுடியாமல் அரபு நாட்டு மக்கள் தங்களது கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சிகளை எதிர்த்து கலகம் செய்தனர். துனூசியா முதல் எகிப்து, லிபியா, யேமன், சிரியா என மக்கள் வரலாறு காணாத அளவிற்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க ஏகாதிபத்தியமோ ’மனித உரிமை காப்பு’, ’ஜனநாயக மீட்பு’ என்ற பேரில், இந்தப் போராட்டங்களின் தலைமையைக் கைப்பற்றி,இராணுவ உதவிகள் மற்றும் தலையீடுகள் நடத்தி, தமது அடிவருடிகளின் ஆட்சியை தவிர்க்க இயலாமல் அகற்றிவிட்டு, தமது புதிய பொம்மை ஆட்சிகளை நிறுவிவருகிறது. இப்பொம்மை ஆட்சிகளை எதிர்த்த அரபுமக்களின் கிளர்ச்சிகள் எகிப்திலும் லிபியாவிலும் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டன. அரபு மக்கள் அமெரிக்காவின் நவீன காலனிய பொம்மை ஆட்சிகளை எக்காலத்திலும் ஏற்கப்போவதுமில்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கனவு பலிக்கப் போவதுமில்லை என்பது திண்ணம்.

4) தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேசிய எழுச்சி


அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் 2008ஆம் ஆண்டின் அதல பாதாள நெருக்கடியிலிருந்து அந்நாட்டின் நிதிமூலதன திமிங்கலங்களை பாதுகாப்பதற்கு நட்ட ஈடு, ஊக்கத்தொகை என ஆண்டிற்கு 700 பில்லியன் டாலர்கள் மக்களின் வரிப்பணத்தை வாரி வழங்கினர். அதன் விளைவாக நிதிமூலதனக் கும்பல் கொழுத்தனவே ஒழிய பொருளாதார நெருக்கடி தீரவில்லை. மாறாக நெருக்கடிகளின் சுமைகள் முழுதும் அந்நாட்டு மக்கள் மீது திணிக்கப்பட்டது. சமூக நலத்திட்டங்கள் கைவிடப்பட்டன. அரசியல் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டன. ஏற்கனவே வேலையின்றி, போதிய வருமானமின்றி வாடிக்கொண்டிருக்கும் மக்கள், அரசுக்கு எதிராக போராட்டத்தைத்  துவங்கினர். ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைதான் தொடர்கிறது.

 அமெரிக்க மக்கள் சந்திக்கும் துன்பதுயரங்களுக்கு  நிதி மூலதனக் கும்பல்களே காரணம் என்று கூறி அமெரிக்க மக்கள் வால்ஸ்டீரிட்டை முற்றுகையிடும் போராட்டத்தைத் தொடங்கினர். நிதிமூலதனக் கும்பல்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நிறுத்தவேண்டும் எனவும் முதலாளித்துவம் ஒழிக என்றும் அம்மக்கள் நாடுதழுவிய அளவில் தொடர்ந்து போராடி வருகின்றனர். அந்தப் போராட்டம் ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட 87 நாடுகளில் பரவி தொடர்ந்து நடந்துவருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் அத்தகைய போராட்டங்களை ஒடுக்க கடுமையான அடக்குமுறையை ஏவிவிட்ட பிறகும் கூட மக்கள் அஞ்சாமல் போராடி வருகின்றனர். அமெரிக்காவில் இம்மேநாளில் நாடுதழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. 80ஆம் ஆண்டுகளின் இறுதியில் ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியை (அதுவும் முதலாளித்துவ நெருக்கடிதான்) , காரணம் காட்டி அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் தாசர்கள் கம்யூனிசம் ஒழிந்துவிட்டது என்று கூத்தாடினர். ஆனால் இன்று அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ உலகம் முழுவதும் முதலாளித்துவம் ஒழிக என்று மக்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர்!

இந்த தொழிலாளர்வர்க்க ஜனநாயக இயக்கமானது உள்நாட்டின் அரசியல் பொருளாதார மேம்பாட்டிற்கானதாக மட்டுமல்லாமல் ஏகபோக முதலாளித்துவத்தின் நவீன காலனியாதிக்கத்திற்கும், உலகமறுபங்கீட்டு அநீதி யுத்தங்களுக்கும் எதிரானதாகவும் உள்ளது.

எனவே இன்று ஏகாதிபத்திய நாடுகளில் ஏற்பட்டுவரும் தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சியும், அரபு மக்களின் விடுதலை மற்றும் ஜனநாயகத்திற்கான கிளர்ச்சிகளும் ஏகாதிபத்தியவாதிகளையும் அவர்களின் தாசர்களையும் எதிர்த்து சோசலிசம் மற்றும் விடுதலைக்கான பாதையில் நடைபோடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

உள்நாட்டுச் சூழ்நிலை:

”புலிப்பயங்கரவாதிகளிடம் இருந்து” தமிழ் மக்களை விடுவிக்கும் மனிதாபிமான நடவடிக்கை என்று கூறி ஒரு தேசிய இனப்படுகொலையை சிங்களம் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றி முடித்தது.இதற்கான  அரசியல் தயாரிப்பை நோர்வே பேச்சுவார்த்தை மூலம் எரிக்சொல்ஹெய்மும் அன்ரன் பாலசிங்கமும் சேர்ந்து செய்து முடித்தனர். எல்லாவித யுத்தநெறிகளையும் மீறி விசவாயு வீசிப் போராளிகளைப் படுகொலை செய்து, இலட்சக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்து தனது தேசிய இனப்படுகொலையை தொடர்ந்தது சிங்களம். அமெரிக்கா, ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள், ரஷ்ய சீன பிராந்திய ஆதிக்கவாதிகள், இஸ்ரேல் பாக்கிஸ்தான், இந்திய விஸ்தரிப்புவாத அரசு அனைவரும் இந்த யுத்தத்திற்கு அனைத்து இராணுவ தளபாட மற்றும் புலனாய்வு உதவிகளையும் வழங்கி ஆதரித்தனர். ஒபாமாவும் சமாதான தூதுவர் எரிக் சோல்ஹெமும் ஒரு படி மேலே சென்று விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சிங்களத்திடம் சரணடைய வேண்டுமெனப் பகிரங்கமாகக் கோரினர்.சிங்களத்தின் கோரத் தாண்டவத்துக்குள் சிக்குண்ட மக்கள் கை கூப்பி அழுதும், தொழுதும், வேண்டியும் கூட அவர்களை அநாதரவாக விட்டு விட்டு ஐ.நா.வெளியேறியது.

சரணடைந்த முக்கிய உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் சிறைவைக்கப்பட்டனர். இவர்களின் சரியான எண்ணிக்கையோ பேர்விபரமோ இதுவரை வெளியிடப்படவில்லை. அறியப்பட்ட சிலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வேறு ஒருசிலர் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பகுதியினர் என்ன ஆனார்கள் என்ற விபரம் கூட இன்றுவரை எவருக்குமே தெரியாது. பெண்போராளிகள் சிலர் இந்திய புடவை நிறுவனங்களுக்கு விளம்பர ’போஸ்’ கொடுத்து புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். வேறு சில போராளிகள் அரசியலில் ஈடுபடக் கூடாது, தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் கையெழுத்து இடவேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் கூட மீண்டும் கைது செய்யப்படுவது தொடர்கிறது.

யுத்தத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு கடந்து போன இந்த மூன்று வருடங்களிலும் சிங்களம் தனது தேசிய இன அழிப்புக் கொள்கையை கைவிடவில்லை. குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஆயுதம் ஏந்திய எதிர்ப்பு இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்தி தமிழீழ தேசத்தின் இருப்பை இல்லாதொழிப்பதை இலக்காகக் கொண்டு தனது அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிட்டு வருகின்றது.. ஈழத்தமிழர்களுக்கான ஒரு அரசியல் தீர்வை காண மறுத்து வருகிறது. வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பு தமிழர் தாயகம் என்பதை ஏற்க மறுக்கிறது. ஈழத் தமிழர்கள் பகுதிகள் முழுவதும் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அது மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான தமிழ்மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்த மறுப்பதுடன், தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தைத் திட்டமிட்டு நிறைவேற்றி வருகிறது. இந்த இஸ்ரேல் பாணி நிலப்பறிப்பு மற்றும் இராணுவ மயத் திட்டமானது திட்டமிட்ட தேசிய அழிப்பாகும்.

பக்ச பாசிஸ்டுக்கள் தமிழர்கள் மீது மட்டுமல்லாது, உழைக்கும் சிங்கள மக்கள், மலையக மக்கள், இஸ்லாமியத் தமிழர்கள் மீதும் தாக்குதல் தொடுக்கிறது. தமது ஆட்சிக்கு எதிரான சிங்கள எதிர்க்கட்சியினர், மனித உரிமை அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள் மீதும் வெள்ளை வான் கும்பலை ஏவிவிட்டு எச்சிறு எதிர்ப்பையும் நசுக்குகின்றது. அது இலங்கை முழுவதையும் ஒரு இராணுவ சர்வாதிகார ஆட்சியின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இத்தகைய அரசியல் தாக்குதல்கள் மட்டுமல்ல உலகமய, தனியார்மய, தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை அமூல்படுத்துவதன் விளைவான நெருக்கடிகளையும் இலங்கை மக்கள் மீது சுமத்துகின்றது.இதற்கு எதிரான எதிர்ப்புக்களையும் துப்பாக்கி முனையில் நசுக்குகின்றது.

இதனால் சிங்களத்தை எதிர்த்து இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவதற்கான புறச்சூழல் உருவாகி வருகின்றது.எனினும் இப்புறச் சூழலுக்குப் பொருத்தமாக அகச்சூழல் மாறவில்லை.தமிழீழ மக்கள் ஒரு தேசிய இனத்தவர் என்பதை அங்கீகரித்து அவர்களின் பிரிந்து செல்லும் உரிமையை உறுதி செய்ய தம் சொந்த ஆளும் கும்பல்களை எதிர்த்துப் போராட சிங்கள மக்கள் இன்னமும் தயாராக இல்லை.தமிழ்மக்கள் மத்தியில் நிலவும் குறுமினவாதமும், அதை ஏகாதிபத்திய தாச, சமரசத் தலைமைகள் தொடர்ந்து ஊட்டி வளர்ப்பதும் கூட இவ் ஐக்கியத்துக்குத் தடையாக உள்ளது. ஆனால் இந்நிலைமை மாறிவருகின்றது என்பதும், புறவய நிகழ்வுகள் இம்மாற்றத்தைத் தீவிரப்படுத்தும் திசைவழியில் பயணிக்கின்றன என்பதும் முக்கியமானதாகும்.

எனவே இத்தகைய ஒரு ஒன்றுபட்ட வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்பும் வரையில் தமிழீழப் பிரிவினைக் கோரிக்கை என்பது பொருத்தமுடையதே ஆகும்.அதேவேளை ஒன்றுபட்ட இயக்கத்தைக் கட்டியெழுப்ப பிரிவினைக் கோரிக்கை தடையாக இல்லாதிருக்கும் பொருட்டு, பிரிந்து செல்லும் உரிமையை உயர்த்திப்பிடிப்பது அவசியமாகும். மேலும் உடனடியாக தமிழீழ மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கப் போராடுவது,  முதன்மையான அவசரக் கடமையாக , மாறியுள்ளது.

வடக்கையும் கிழக்கையும் நிர்வாக ரீதியாக இணைத்து அதைத் தமிழர் தாயகமாக அங்கீகரிப்பது, தமிழர் பகுதிகளிலிருந்து சிங்கள இராணுவத்தை திரும்பப் பெறுவது, சிங்களக் குடியேற்றங்களை அகற்றுவது, மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளில் தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறுவது,யுத்தக்கைதிகளை விடுதலை செய்வது, யுத்தத்தால் இடம் பெயர்க்கப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்துவது,விவசாயம் மீன்பிடி மற்றும் வனத் தொழில்களுக்கு உள்ள தடைகளை நீக்குவது, யுத்தத்தால் பாழடிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வியளிப்பது, யுத்தத்தால் தனித்துப் போன பெண்கள் சிறுவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிப்பது போன்ற கோரிக்கைகளை உடனடியாக போராடிப் பெறுவது அவசியமாகும். இப்போராட்டங்களில் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கவும், இதேபோல் இதர மக்களின் குறிப்பான பிரச்சனைகளில் அவர்களுடன் ஒன்றுபட்டுப் போராடுவதும் அவசியமாகும்.

இவையல்லாமல் ஏகாதிபத்திய தாசர்களும், இன ஒடுக்குமுறையாளர்களும், சிங்கள பெளத்த வெறியர்களுமான சிங்கள ஆளும் வர்க்கத்தின் எத்தப் பிரிவினருடனும், உள்நாட்டுச் சமரசம் மூலமோ, அல்லது அந்நியத் தலையீட்டின் மூலமோ அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் எந்தச் சீர்திருத்தமும் இன ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டாது.மாறாக சிங்களத்தின் அடிமைத்தனத்துடன் கூடவே, நேரடியான ஏகாதிபத்திய அடிமைத்தனத்துக்குமே  வழியமைக்கும்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிராக கொண்டுவந்துள்ள தீர்மானம் பக்ச பாசிஸ்டுக்களை இன அழிப்புப் போர்க்குற்றவாளிகள் என்று அறிவிக்கவில்லை, போர்க்குற்றங்கள் குறித்தும் எதுவும் கூறவில்லை. 2010ஆம் ஆண்டில் டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புகளிலிருந்து உலக மக்களை திசைதிருப்பி, இலங்கையின் மீது அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கானதே இந்த தீர்மானமாகும். குற்றவாளியான இராஜபட்சேவையே நீதிபதியாகக் கொண்டு “கற்றுக்கொண்ட பாடம் மற்றும் மறுசீரமைப்பு” என்ற இலங்கை அரசாங்கம் தயாரித்த அறிக்கையை செயல்படுத்துவதையே இத்தீர்மானம் கோருகின்றது. டப்ளின் தீர்ப்பாயம், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இலங்கை அரசுடனான விடுதலைப் புலிகளின் பேச்சு வார்த்தையை சீர்குலைத்ததன் மூலமும், இலங்கை அரசுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகள் செய்ததன் மூலமும் இலங்கை அரசின் இன அழிப்புப் போருக்கு துணைபோயின என்று கூறியது. போர் நடக்கும் போது இந்நாடுகள் வேடிக்கை பார்த்தன என்றும் எனவே இந்நாடுகள் போர்க் குற்றத்திற்கு துணை போயின என்றும் குற்றம் சுமத்தியிருந்தது. எனவே இதையெல்லாம் மூடி மறைத்து இலங்கை அரசையும், இராஜபட்சே கும்பலையும் மிரட்டி பணிய வைக்கவே தற்போது அமெரிக்கா மனித உரிமை பேசி இலங்கையில் தலையிடுகிறது. இந்திய அரசாங்கமோ அந்தத் தீர்மானத்திலும்-இலங்கை அரசின் அனுமதியுடன்தான் ஐ.நா. செயற்படவேண்டும் என்று- திருத்தம் கொண்டுவந்து ஆதரித்தது. இராஜபட்சேவுக்கு சாதகமாகத்தான் நாங்கள் செயல்பட்டோம் என்று மன்மோகன் சிங் கடிதம் எழுதி தமது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார். மேலும் இந்தப் போரை இந்தியாவிற்காக நாங்கள் நடத்தினோம் என்று இராஜபட்சே கும்பல் கூறியது. இந்திய அரசு போரை முன்னின்று நடத்தியது. இவர்களும் போர்க்குற்றவாளிகளே. இந்தியாவைப் பொறுத்தவரை சீனாவின் பக்கம் இலங்கை சாய்ந்துவிடுவதை தடுப்பது  நோக்கமாகும். இந்தத் தீர்மானத்தால் ஈழத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அரசியல் தீர்வும் கிடைக்கப் போவதில்லை. சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்தியத் தூதுக்குழுவின் நடவடிக்கைகளே இதற்கு நல்லதொரு சான்றாக அமைந்துள்ளது. இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டை இந்தியா பாதுகாக்கும் என்பது இன ஒடுக்குமுறையை அங்கீகரிப்பது தவிர வேறொன்றுமல்ல.

 மறுபுறம் ரசியாவும், சீனாவும் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடக் கூடாது என்றும், நாடுகளின் இறையாண்மையை காப்பது என்ற ஐ.நா சாசனத்தை மீறக்கூடாது என்றும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்ப்பதாகவும் கூறுகின்றன. ஆனால் இவ்வாறு கூறிக்கொண்டு பக்ச பாசிஸ்டுக்களின் இனப்படுகொலையை இவர்கள் ஆதரிக்கின்றனர். சர்வதேச அரங்குகளில் இலங்கையைப் பாதுகாக்கின்றனர். இவர்களும் இலங்கை மீதான தங்களது செல்வாக்கு மண்டலத்தை விரிவுப்படுத்துவதற்காகத்தான் இலங்கை அரசுக்கு துணைபோகின்றனர்.

புலம்பெயர் தமிழ்ச் சமூகச் சூழல்:

புலம்பெயர் தமிழர் எனப் பொதுவாக அழைக்கப்படுவோர் இலங்கையில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தேவைகளின் நிமித்தம் வெளிநாடுகளில் குடியேறியோர் ஆவர். இவர்களின் முதல் தலைமுறையினர் காலனியாதிக்க அதிகாரத்தில் பங்குகொண்ட பிரிவினரின் வழி வந்தோர் ஆவர். இரண்டாவது தலைமுறையினர் போலிச்சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையில், அதிகாரபூர்வ சலுகைகளின் மூலம் உயர்கல்வி மற்றும் இதர தேவைகளுக்காக சட்டபூர்வமாக குடியேறியோர் ஆவர்.மூன்றாவது தலைமுறையினர் இலங்கையில் தமிழ்த்தேசியப் பிரச்சனையின் விளைவாக வெளியேறியோர் ஆவர்.இவர்களில் மிகப் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக புகுந்தவர்களும், பெருந்தொகைப்பணத்தை இப்பயணத்துக்காக இறைத்தவர்களும் இதன் காரணமாக கடும் உடல் உழைப்புக்கு உள்ளாக நிர்ப்பந்தப்பட்டவர்களும் ஆவர்.

இதிலிருந்து புலம்பெயர் தமிழரிடையே ஒரு ‘கற்றறிந்தோர்’ குழாம், சில்லறை வணிகர்கள், நாளாந்த கடும் உழைப்பாளிகள் என்ற சமூகப் பிரிவுகளும் தோன்றியுள்ளன.

பொருளுற்பத்தி உறவில் இவர்கள் வகிக்கும் பங்கு பாத்திரத்தின் காரணமாக இப்பிரிவினரது அரசியல் சமூக சிந்தனையும் அமைந்துள்ளது இயற்கையே!

மூத்த குடியினர் காலனியாதிக்கத்தின் கருப்பையில் பிறந்தவர்கள், கற்றறிந்தோர் குழாம் என அறியப்படுவது, சிந்தனா பூர்வமாக ஏகாதிபத்திய அடிமைத்தனத்தை தொழுதேற்றுக் கொண்டது, வணிகர்கள் எனப்படுவோர் ஏகபோக வணிகத்தின் முன்னால் தமது மூலதனப் பெருக்கத்துக்கு வழியற்றோர்.இந்த இழவு அவ்வளவும் ஒன்று சேர்ந்த கலவையே புலம்பெயர் நாடுகளில் சமரசத்துக்கான சமூக வேர் ஆகும்.

இதைச் சுற்றி பல்வேறு தீமைகள் படர்ந்துள்ளன.உள்நாட்டு ஆளும் கும்பல்களுடன் உள்ள உறவு, மத நிறுவனங்களுடன் உள்ள உறவு, கலைப்புவாதிகளுடன் உள்ள உறவு, என்.ஜி.ஓ கருங்காலிகளுடன் உள்ள உறவு என இந்த விச வித்து விரிந்துள்ளது.

மறுபுறம் சாமானிய உழைக்கும் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒரு சமூகம் என்றமுறையில் மேலை நாடுகளில் தேசிய சிறுபான்மை இனத்தவர் ஆவர்.மேலை நாடுகளில் தேசிய சிறுபான்மை இனத்தவர்களுக்கு என்ன மதிப்பும் மரியாதையும் உண்டோ, என்ன இழிவுகளையும், ஒதுக்குதல்களையும்  அவர்கள் சந்திக்கின்றார்களோ அதை இவர்களும் சந்தித்தாக வேண்டும்.மேலும் மரணத்தறுவாயில் இருக்கும் முதலாளித்துவம் சுமத்தும் அனைத்து நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கவேண்டும்.தமது அடுத்த சந்ததியினரின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும்.இது சார்ந்த பண்பாட்டுக் கடமைகளையும் சுமக்க வேண்டும்.இதன் பொருட்டு தமது இருப்புக்கு ஒரு அடையாளத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்.இவர்கள் தான் சுதந்திரத்தின் ஆதரவாளர்கள் ஆவர்.

இந்திய விஸ்தரிப்புவாத அரசு:

தமிழீழத் தேசியப் பிரச்சனை ஒரு உள்நாட்டு யுத்தமாக வடிவமெடுத்த 1983 முதல் ஈழத்தமிழரைக் காப்பதாக இந்தியா நாடகமாடிவருகின்றது. ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண சிங்களத்தைக் கோருவதாகவும் பசப்பி வருகின்றது.ஆனால் இந்த 30 ஆண்டுகளில் இந்தியா மூலம் ஈழத்தமிழ்மக்கள் அடைந்தது என்ன?

ஈழத்தமிழ்மக்களின் அரசியல் பிரதிநிதிகளாகவும்,சிங்களத்தின் இன அழிப்பில் இருந்து அவர்களைக் காக்கும் அரணாகவும் இருந்த விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்ட இந்திய அரசு 1987 இல் முயன்றது.இந்த இராணுவ முயற்சி தோற்கடிக்கப்பட்டாலும், இலங்கையை அடிபணிய வைத்து இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் தனது மேலாதிக்கத்தை நிறுவிக் கொண்டது. 70 களின் பிற்பகுதியில் இலங்கை ஜப்பானின் குப்பைத் தொட்டி (பஞ்சிகாவத்த) என அழைக்கப்பட்டது. ஆனால் இன்று இலங்கை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணி வகிக்கின்றது.ஜப்பான் வெறும் 5%என்ற நிலைக்கு பின்தள்ளப்பட்டுவிட்டது. இலங்கையின் இறக்குமதி விகிதாசாரம் வருமாறு India 19.4%, China 15.1%, Singapore 9.1%, Iran 7%, Japan 4.9% (2010).
 1987 இல் தோற்றுப்போன முயற்சியை 2008 இல் இந்தியா நிறைவேற்றியது.

முள்ளிவாய்க்கால் பிரளயத்தின் மிக முக்கியமான ஈடு செய்ய இயலாத இழப்பு தமிழ் மக்கள் தமது விடுதலை இராணுவமான விடுதலைப் புலிகளை களப்பலி கொடுத்ததாகும். இந்தியா ஈழப்பிரச்சனையில் தலையீடு செய்யாதிருந்திருந்தால் இப்பேரிழப்பு நேர்ந்திருக்காது.இதற்காக எத்தனை தலைமுறைக்கும் ஈழம் இந்தியாவை மன்னிக்காது.

இந்த இந்தியா இப்போது சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதாகக் கூறி தொடர்ந்தும் தமிழீழப் பிரச்சனையில் தலையீடு செய்கின்றது.ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னால் அமெரிக்காவின் யுத்ததந்திரக் கூட்டாளியாகிவிட்ட இந்தியா, அமெரிக்காவின் உலக மறுபங்கீட்டிற்கு இலங்கையைப் பணியவைக்க ஈழத்தமிழர்களை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றது.அமெரிக்கத் தீர்மானத்தை திருத்தியெழுதி இந்தியா வழங்கிய ஆதரவு இதையே காட்டுகின்றது.

அமெரிக்கத் தீர்மானம் ஒரு அரசியல் முள்ளிவாய்க்கால்:

அமெரிக்க நவீன காலனியாதிக்கத்தின் உலக மறுபங்கீட்டிற்கான இலங்கை மீதான தலையீடு, `நிரந்தர சமாதானம்` என்ற முழக்கத்துடன் நுழைவதே அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கியத்துவமாகும்.விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னால் உருவாகியுள்ள சமாதானச் சூழல்- உலகமயமாக்கல் கொள்ளைக்கான வாய்ப்பு- மீண்டும் கை நழுவிப் போய் விடாது நீடித்து நிலைத்து இருக்க வேண்டிய, சில சீர்திருத்தங்களை சிங்களம் செய்தாக வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாகும்.அந்தச் சீர்திருத்தங்கள் LLRC இல் சிங்களத்தால் முன்வைக்கப்பட்டவை ஆகும்.சிங்களம் இதனையும் அமூலாக்காது, அமெரிக்காவும் இந்தியாவும் அதை அமூலாக்கக் கோரிய வண்ணம் தொடர்ந்து தலையீடு செய்யும்.எனவே இந்த நிரந்தர சமாதானம் நிரந்தர தலையீட்டிற்கான கருவியாகிவிடும். இதன் மூலம் அமெரிக்கா தனது நலன்களை அடைந்து கொள்ளும்.

உலக மேலாதிக்கத்திற்கான தனது யுத்ததந்திரக் களமுனையாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தை அமெரிக்கா தேர்ந்துள்ள நிலையில் இத்தீர்மானம், மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இதற்குமேல் தமிழர் நலன் குறித்து அமெரிக்கத் தீர்மானத்தில் எதுவும் இல்லை.சொல்லப்போனால் தமிழர் என்கிற வார்த்தையே இல்லை.இதை தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்கான அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சி என்பதாக ஒபாமாவின் புலம் பெயர் தமிழர்கள் கூப்பாடு போடுகின்றனர்.

1983 இல் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுவதாகக் கூறி இலங்கையில் இந்தியா தலையிட்டதற்கு தமிழ் அமைப்புக்கள் துணைபோனது இன்று எந்த நிலைமைக்கு தமிழர்களைக் கொண்டுவந்து விட்டுள்ளதோ, அதைவிட மோசமான நிலைமைக்கு இன்று அமெரிக்கத் தலையீட்டிற்கு வழங்கும் ஆதரவு கொண்டு செல்லும் என்பதை தமிழர்கள் ஒரு கணமேனும் மறந்து விடக்கூடாது.

இந்த அமெரிக்கத் தீர்மான ஆதரவுப் போக்கு, இலங்கையில் ஒரு ஒன்றுபட்ட தேசிய ஜனநாயக இயக்கத்தைக் கட்டியெழுப்ப உருவாகிவரும் புறவய வாய்ப்புக்களைப் பயன்படுத்த இயலாமல் நாசம் செய்துவிடும்.ஈழ விடுதலைப் போராட்டத்தை அமெரிக்க ஆதரவுப் போராட்டமாக்கி சர்வதேச ரீதியாக எம்மைத் தனிமைப்படுத்திவிடும். போலி அமெரிக்க எதிர்ப்பு நாடகமாடி சிங்களம் மக்களைத் தன் அணியில் சேர்த்துக் கொள்ள வழி சமைக்கும்.

எமது எதிரிகளான அமெரிக்காவும், இந்தியாவும்,சிங்களமும் இதனால் பயன் அடைய, நாம் எல்லா முனையிலும் தனிமைப்பட்டு விடுவோம்.

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னால் விடுதலைப் போராட்டம் மீண்டும் தலையெடுத்துவிடக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருக்கின்ற அத்தனை சக்திகளும், அமெரிக்க-இந்திய தீர்மானத்தை விழுந்து விழுந்து ஆதரிப்பது காரணம் இல்லாமல் இல்லை.

இன்றைய அரசியல் சூழலின் பிரதான போக்குகள்:
1) ஏகபோக முதலாளித்துவத்தின் உலகு தழுவிய 3வது பொது நெருக்கடி தீர்வுகாண இயலாமல் தொடர்வது, உலக மறுபங்கீட்டு யுத்தங்கள் தீவிரமடைவது,`நிரந்தர சமாதானம்` என்கிற போர்வையில் அமெரிக்கா இலங்கையில் தலையீடு செய்வது.
2) ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த தந்திரக் கூட்டாளியாகிவிட்ட இந்திய விஸ்தரிப்புவாத அரசு, இலங்கைத் தலையீட்டில் அமெரிக்காவுடன் இணக்கம் காண்பது.
3) உலக மறுபங்கீட்டில் ஒரு போர்க்களமாகிவிட்ட இலங்கையில் அமெரிக்க-இந்திய அணிக்கு சவாலாக ரசிய-சீன அணியுடன் பேரம் பேசும் போக்கை பக்ச பாசிஸ்டுக்கள் கடைப்பிடித்து,இராணுவ சர்வாதிகார அடக்குமுறையை முழு இலங்கை மக்கள் மீதும் தொடுத்து, தமிழீழத் தேசிய இன ஒடுக்குமுறையைத் தொடர்வது.
4) இதன் விளைவாக இலங்கையில் அனைத்து மக்களும் தமது ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க, பக்ச பாசிஸ்டுக்களை எதிர்த்து ஒன்றுபட்டு போராட வாய்ப்புக்கள் உருவாகுவது.
5) புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் ஒரு பிரிவினர் ஏகாதிபத்தியவாதிகளுடனும், இந்திய விஸ்தரிப்புவாத அரசுடனும் அணிசேர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சமரச சந்தர்ப்பவாத வழிகளில் சீர்குலைக்க முயல்வது, மறுபுறம் பெருந்திரளான மக்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தின் பின்புலமாகத் தொடர்ந்தும் நீடிப்பது.
இவையே ஈழவிடுதலைப் போராட்டம் எதிர்கொள்ளும் இன்றைய பிரதான அரசியல் போக்குகளாகும்.
 
பிரதான போக்குகள்பால் சமூக வர்க்கங்களின் (கட்சிகளின்) நிலையும், அணி சேர்க்கையும்:
 
ஒடுக்கும் சிங்களப் பெருந்தேசிய இனத்தின் ஐக்கிய தேசியக் கட்சியோ, அல்லது சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பக்ச குடும்ப எதிர்ப்பு (சந்திரிக்கா) அணியோ, அல்லது சரத் பொன்சேகாவோ எல்லோருமே ஈழத்தமிழரை இனப்படுகொலை செய்த யுத்தக் குற்றவாளிகள் ஆவர். இவர்கள் ஏகாதிபத்திய தாசர்களும், இந்திய விஸ்தரிப்புவாதத்தின் ஆதரவாளர்களும் ஆவர். இதனால் இக்கட்சிகள் எதிரிகள் ஆகும்.
 
ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சாதுக்களின் அனைத்து அரசியல் நிறுவனங்களும் சிங்களப் பேரின வெறியையும் பெளத்த பாசிசத்தையும் அடிமட்ட கிராமப்புற ஏழை எளிய உழைக்கும் சிங்கள மக்களிடையே விதைக்கும் விசக்கிருமிகளாகும்.இதற்கு கிராமப்புற விவசாயிகளிடையே அதிகாரம் செலுத்தும் பெளத்த பாஞ்சாலைகளை பயன்படுத்துகின்றார்கள். இவர்கள் எதிரிகளின் ஆதார சமூகத் தூண்கள் ஆவர்.
 
சிங்களக் குட்டிமுதலாளிய ஜே.வி.பி பேரின வெறியிலும், பெளத்த பாசிசத்திலும் மேற்கண்டவர்களுக்கு சற்றும் சளைத்தது அல்ல. சொல்லில் சோசலிசமும் செயலில் பேரினவாதிகளுமான சமூக தேசிய வெறியர்களே இவர்கள். தமிழீழத் தேசிய இன ஒடுக்குமுறையில் இவர்கள் எதிரிகளின் நம்பகமான கூட்டாளிகளாக செயல்படுகின்றனர்.
 
உதிரிகளாகவோ,சிறு சிறு குழுக்களாகவோ இருப்போரில் பெரும்பாலானோர் இந்த அல்லது அந்த என்.ஜி.ஓ வில் ஞானப் பால் குடிக்கும் பிள்ளைகளே ஆவர்.
 
இஸ்லாமியத் தமிழர்களின் கட்சிகள் என்று சொல்லப்படுபவை இரண்டு பேரினவாதக் கட்சிகளோடு கூட்டமைத்து ஆதாயம் அடையமுயலும் பிழைப்புவாத சமரசசக்திகளே ஆகும்.இஸ்லாமிய மக்களிடையே இருக்கும் அதீத மத நம்பிக்கையை இதற்கு ஆதாரமாக்கிக் கொள்கின்றார்கள். தம்புள்ள மசூதி தாக்குதலில் பெட்டிப்பாம்பாக அடங்கிப் போனார்கள் இந்த வெறும் பேச்சு வீரர்கள்.ஈழவிடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்கு இவர்கள் பேரினவாதக் கட்சிகளுக்கு துணைபோகின்றனர்.
 
மலையகத் தமிழர் மத்தியிலான கட்சிகளும், தொழிற்சங்கங்களும் அம்மக்களுக்கு தொடர்ந்து இழைத்த துரோகத்தினால் செல்வாக்கிழந்து வருகின்றனர். மலையகத்தில் அட்டைகளைக் காட்டிலும் என்.ஜி.ஓக்கள் அதிகம்.
 
கூட்டமைப்பு பல குள்ளர்களினதும், சில நல்லவர்களினதும் கூடாரம். அமெரிக்காவும் இந்தியாவும் இவர்களைத் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக்க படாதபாடுபட்டும் அது நாய் வாலை நிமிர்த்தும் கதையாகிவிட்டது. இப்போது சந்திரகாசன் என்கிற பேய், இராசதுரை என்கிற பூதம், பெருமாள் என்கிற சடலம் இவர்களை வைத்து ஒரு மயானகாண்டம் நடத்துகின்றது இந்தியா. இந்தக் கும்பல் அனைத்துமே இந்திய அடிமைகள் ஆவர்.
 
இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல `உருத்திரகுமாரனும் 40 பேரவைகளும்`, `ஒபாமாவும் அவருக்கான தமிழர்களும்`!
 
இச்சித்திரத்தில் தெரிகின்ற பொதுவான உண்மை என்னவென்றால் மேற்கண்ட பிரதான போக்குகள்பால் மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடு இந்தக்கட்சிகள் எவற்றுக்கும் கிடையாது.எல்லாம் ஏதோ ஒருவகையில் எதிரிகளுக்கு சேவகம் செய்கின்றவையே ஆகும்.குறிப்பாக ஏகாதிபத்திய தாசர்கள் ஆவர்.
 
ஏகாதிபத்தியம் மனிதகுலத்தின் எதிரி.
 
ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தனது நூலில் மாமேதை தோழர் லெனின் ஏகபோகங்களது வரலாற்றின் முக்கிய கட்டங்களை மூன்றாக வகைப்படுத்துகின்றார்.(1-1860-70- 2- 1873) மூன்றாவது கட்டமாக, ``பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட உயர்வேற்றமும், 1900-1903ம் ஆண்டுகளின் நெருக்கடியும், பொருளாதார வாழ்வு அனைத்தின் அடிப்படைகளில் ஒன்றாக கார்ட்டல்கள் ஆகிவிடுகின்றன.முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாற்றமடைந்து விடுகிறது`` என்பார். (தேர்வு நூல் தொகுதி 4, பக்கம் 61)
 
ஆக மனிதகுலம் ஏகாதிபத்திய நுகத்தடியின் கீழ் ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மேலாக கட்டுண்டு கிடக்கின்றது.இந்த நீண்ட காலத்தில் காலனியாதிக்கம், இரண்டு உலகப் போர்கள்,நவீனகாலனியாதிக்கம், எண்ணற்ற பிராந்திய உள்நாட்டு யுத்தங்கள், எல்லைத் தகராற்றுப் போர்கள், அணு ஆயுதப் பரவல்,பசி பஞ்சம் பட்டினி,வேலையின்மை,சமூக மோதல்கள்,கலகங்கள், வன்முறை; கொடிய நோய்கள் கொள்ளை வியாதிகள், மாசுபட்ட சூழல்,வற்றிப்போன வளங்கள்,சிறுவர் உழைப்பு, வக்கிரப் பாலியல் வன்முறை, உணவு உடை உறையுள் கல்வி குடிநீர் ஆகிய அடிப்படை மனித உரிமைகள் இழந்த இலட்சோப இலட்சம் மக்கள். நாடுகளுக்குள்ளும், எல்லைகள் தாண்டியும் அகதிகள் பட்டாளம். ஊழல் அதிகார துஸ்பிரயோகம்,சதிப்புரட்சி,இராணுவ ஆட்சி, கொடுங்கோன்மை.
 
ஏறத்தாழ உலக நாடுகளில் 25வீதமான(55) நாடுகளையும்,உலக சனத்தொகையில் 15 வீதமானவர்களையும், எண்ணற்ற வளங்களையும் வனப்பையும் உழைப்பையும் கொண்ட ஆபிரிக்கக் கண்டத்தை எவ்வாறு கடித்துக் குதறினார்கள் என்பது ஏகாதிபத்தியத்தின் கோரமுகத்துக்கு சான்றாகும். இத்தனையையும் மனிதகுலம் அநுபவிப்பது வெறும் 1வீதமான நிதியாதிக்க கும்பலுக்காக!
 
எனவே ஏகாதிபத்தியத்துக்கு முடிவுகட்டுவது மானுட தர்மமும், தார்மீகக் கடமையுமாகும்.
 
இதனால் இவ்வாண்டு மேநாளில், தேசிய சுதந்திரத்துக்காக மாண்ட நம் மக்களதும் மாவீரத் தோழர்களதும் வீர நினைவாக அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளின் நவீன காலனியாதிக்கத்தை முறியடிக்கவும், உலகத் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலையை சார்ந்து நிற்கவும், ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்பவும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் செயற்பட ஒன்றுபடுமாறு  அறைகூவி அழைக்கின்றோம்.
 
• மரணப்படுக்கையிலிருக்கும் முதலாளித்துவத்தைக் காப்பாற்ற மனித குலத்தைப் பலியெடுக்கும் நவீன காலனியாதிக்க உலக மறுபங்கீட்டு யுத்தங்களை எதிர்ப்போம்!
 
• ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ மயமாக்கலை எதிர்ப்போம்!
 
• நவீன காலனியாதிக்க ஆட்சிக்கவிழ்ப்பு, அந்நியத் தலையீடுகளை, புதிய ஜனநாயக உள்நாட்டுப் புரட்சியால் தோற்கடிப்போம்!
 
• ஒற்றையாட்சிச் சிங்களத்தை எதிர்ப்போம், தமிழீழ சுயநிர்ணயத்துக்காகப் போராடுவோம்! ஆறாவது திருத்தச் சடத்தை நீக்கக் கோருவோம்!
 
• இலங்கையை உலகமறுபங்கீட்டுப் போர்க்களமாக்கும் சக்திகளை எதிர்ப்போம்!
 
• ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியத் தலையீட்டை எதிர்ப்போம்! இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறியப் போராடுவோம்!
 
• மலையகப் பெருந்தோட்டத் தனியார் மயமாக்கலை எதிர்த்த போராட்டங்களுக்கு ஆதரவளிப்போம்!
 
• இஸ்லாமியத் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போம்!
 
• தொழிலாளர்களின் தொழிற்சங்க, ஜனநாயக, அரசியல் உரிமைகளுக்காகப் போராடுவோம்!
 
• சிங்கள ஏழை விவசாயக் குடும்பப் பெண்களை கொத்தடிமைகளாக மத்தியகிழக்கு நாடுகளுக்கு அனுப்பும் கொடுஞ்செயலை தடைசெய்யப் போராடுவோம்!
 
• அபிவிருத்தி என்ற பெயரால் சிங்கள விவசாயிகளின் நிலங்களை அந்நியக் கம்பெனிகளுக்குத் தாரைவார்த்துவிட்டு, தமிழ் விவசாயிகளின் நிலங்களில் சிங்களவர்களைக் குடியேற்றி இனப்பகையைத் தூண்டும் இழி செயலை எதிர்ப்போம்!
 
• மீன்பிடி மற்றும் வனத் தொழில் மீது விதிக்கப்பட்டிருக்கும் சட்டத்தடைகள், இராணுவக் கெடுபிடிகளை நிறுத்தப் போராடுவோம்!
 
• பக்சபாசிஸ்டுக்கள் மக்கள் மீது சுமத்தியுள்ள அத்தியாவசிய எரிபொருள், உணவுப் பண்ட விலை உயர்வு, வரிச்சுமைகளைத் திரும்பப் பெறப் போராடுவோம்!
 
• யுத்தக்கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்யப் போராடுவோம்!
 
• அந்நியத் தலையீட்டையும், உள்நாட்டு இனவெறிப் பாசிச இராணுவ சர்வாதிகாரத்தையும் வெற்றிகொள்ள பரந்துபட்ட தேசபக்த ஜனநாயக ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்போம்!
 
உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒன்றுபடுவோம்!
 
மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வழி நடப்போம்!
====================================================================
புதிய ஈழப்புரட்சியாளர்கள்       தமிழீழம்     மே 2012      eelamnewsbulletin@googlemail.com
====================================================================
 
குறிப்பான திட்டத்தின் செயல் முழக்கங்கள்
 
நல்லிணக்க ஆணைக்குழு விமர்சனம்http://senthanal.blogspot.co.uk/2012/01/on-llrc-report.html

2012 வரவுசெலவுத் திட்டம்http://senthanal.blogspot.co.uk/2011/11/2012-2012-7.html 

No comments: